'''பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா... நான் ரொம்பக் கவலையா இருக்கேன்...’ என்றாள் என் மகள் - பாலா

'''பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா... நான் ரொம்பக் கவலையா இருக்கேன்...’ என்றாள் என் மகள். எல்லாம் முடிந்து, அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். 'இந்தச் சின்னப்பிள்ளைக்கு யார் இதையெல்லாம் சொன்னது?’ என்ற அதிர்ச்சி. அவளை அள்ளித் தூக்கி, 'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது பாப்பா. தாத்தா எங்கயும் போகல. அவரு நட்சத்திரமாகிட்டாருப்பா.  வானத்துல நாம நட்சத்திரம் பார்ப்போம்ல. அப்படி தாத்தாவும் இப்ப ஸ்டாராகிட்டாருப்பா...’ என்று உடைந்துபோய் அழுதேன். அப்பனின் அழுகை புரியாமல், 'ப்பா... அழாதப்பா...’ என்று என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள் பாலுத் தாத்தாவின் பேத்தி அகிலா (எ) பிரார்த்தனா.
ஞானத் தகப்பன் விடைபெற்றுவிட்டான். 'அப்புக்குட்டி அப்புக்குட்டி’ எனக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குருநாதன்.
பாலுமகேந்திரா என்கிற ஒருவர் மட்டும் இல்லையென்றால், நானெல்லாம் 10, 15 வருடங்களுக்கு முன்பே செத்துப்போயிருப்பேன். மூர்க்கனாகத் திரிந்தவனை மனுஷனாக்கியதே அவர்தான். தன் வீட்டில் தங்கவைத்து, கெட்டவை திருத்தி, நல்லவை காட்டி, சோறு போட்டுத் தொழில் கற்றுக்கொடுத்தவர். 25 வருட உறவு இது.
எனக்கும் அவருக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டைதான். 'ஆறு மாசத்துக்கு ஒரு சண்டை போடலேன்னா, உனக்குத் தூக்கம் வராதுல்லடா’ என்பார். அகிலாம்மா என் தாய். எங்கள் சண்டைக்குள் ஒரு நாளும் வரமாட்டார். சாருடன் முறைத்துக்கொண்டு திரிந்தாலும் அகிலாம்மாவைப் பார்க்காமல், பேசாமல் என்னால் இருக்க முடியாது.
ஐந்து படங்கள் சாரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவன் நான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடைசி அசிஸ்டென்ட். படிப்படியாக படம் படமாக வளர்த்து இணை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தவர். படம் பண்ண விரும்பிக் கிளம்பியபோதுகூட, விட்டுவிட மனம் இல்லாமல் பிடிவாதம் பிடித்தவர்.
'என் அசிஸ்டென்ட் பாலா, தனியாப் படம் பண்ணப் போறான். அவன் என் நண்பன். என் மகன். எனக்கு மாரல் சப்போர்ட்டே அவன்தான். நான் பண்ற படங்கள்ல அவனுக்கு உடன்பாடு கிடையாது. அவன் ரசனை வேற...’ என்று 'மறுபடியும்’ வெற்றி விழாவில் சார் சொன்னது ஞாபகம் இருக்கிறது.
'யார்றா அவன் பாலா? பாலு படம் பிடிக்கலைன்னு சொல்றவன். நானே அவர்கிட்ட ஒரு படம் அசிஸ்டென்டா வேலை பார்க்கணும்னு திரியுறேன்’ என்று பாரதிராஜா அங்கேயே கொந்தளிக்க, கமல் சிரித்தார். ஆனால், அது உண்மை. அதேபோல என்னுடைய படங்கள் எதிலும் சாருக்கு உடன்பாடு கிடையாது.
என் முதல் பட பூஜைக்கு வந்தார். 'இந்தா பாலா உனக்கு ஒரு கிஃப்ட்’ எனத் தந்தார். அது ஒரு வியூ ஃபைண்டர். 'பாலா, இது எனக்கு என் குருநாதர் குடுத்ததுடா... அவர் ஆசீர்வாதம்தான் என்னை வழிநடத்தினதுனு நம்புறேன். இதை இப்போ நான் உனக்குக் குடுக்க விரும்பறேன்’ என்றார். எவனுக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்!
என் முதல் படத்தை நான் எவ்வளவோ முறை கேட்டும்கூட, அவர் பார்க்கவே இல்லை. காலம் எவ்வளவு மோசமானது பாருங்கள்... அவரின் கடைசிப் படத்தை அவர் எவ்வளவோ முறை அழைத்தும்கூட, நானோ அகிலாம்மாவோ போய்ப் பார்க்கவே இல்லை. ஆனால், அதுதான் அவரின் கடைசிப் படம் எனத் தெரியாதே!
நாங்கள் சண்டை போட்டாலும் சமாதானமாக இருந்தாலும், சாருக்கும் அகிலாம்மாவுக்கும் ஒவ்வொரு ஞாயிறு மதிய உணவும் என் மனைவி மலர் சமையலாகத்தான் இருக்கும். அதுவும் சாருக்குப் பிடித்த வெளவால் மீன் அதில் நிச்சயம் இருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால், ரத்த வாந்தி எடுத்தவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். மிக மோசமான உடல் நலிவுடன் கிடந்தார். மாத்திரைகள் சாப்பிட மறுத்தார். ஏன் என்று அதட்டினேன். 'இது எல்லாம் கெமிக்கல்ஸ்டா...’ என்றார். 'நீங்க என்ன பச்சப்புள்ளையா... இப்ப சாப்பிடுறீங்களா இல்லியா?’ என்று குரலை உயர்த்தினேன். 'ஹார்ஷாப் பேசாதடா...’ என்றார். 'எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. ஹாஸ்பிட்டல் யூனிஃபார்ம்ல என்னைப் பார்க்க எனக்கே வெறுப்பா இருக்கு. என் சட்டையை வாங்கிக் குடு...’ எனப் பிடிவாதம் பிடித்து வாங்கி அணிந்தார்.
சீஃப் டாக்டரைப் பார்க்கப் போனேன். 'உங்க டைரக்டருக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் ஃபாரின்ல இருந்தா, அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிருங்க... அதிகபட்சம் ரெண்டு வாரம்தான் சார் இருப்பார்...’ என்றார். அதிர்ந்துபோய் வெளியே வந்தேன். சாருக்கு அதை யாரும் சொல்லவில்லை. மௌனமாக அமர்ந்திருந்த என்னிடம், 'டேய்... நான் சைவத்துக்கு மாறிரலாம்னு பார்க்கிறேன்’ என்றார். வேதனையுடன் சிரித்தேன். இன்னொரு தகப்பனான நடிகர் சிவகுமார் சார் சொன்னதுபோல, இதுவும் கடந்துபோகும் என ஒருபோதும் விட்டுவிட முடியாத ஒரு தருணத்தையும் கடக்க வேண்டிய தருணம். என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். 'அம்மா இங்க வாங்க...’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. 'ந்தா போதும் போதும் உங்க சண்டை... புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க...’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி... ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்... 'உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.
மறுபடியும் அட்டாக்... ஸ்ட்ரோக்... சுவாசம் திணறியது. நினைவிழந்து இருந்தார். ஆறேழு மணி நேரம் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தேன். அவரின் பாதங்கள் பற்றி முத்தமிட்டேன். 'க்க்க்க்ர்ர்ரக்க்க்க்’ எனக் குலுங்கி அடங்கிவிட்டது உடம்பு. ஓர் உயிர் பிரிந்து செல்வதை வாழ்வில் முதன்முதலாக நேரில் பார்த்தேன். அகிலாம்மாவுக்கு அழக்கூடத் தெரியாது. அமைதியாக நின்றவர், 'பாலா... வீட்ல வள்ளியும் சுப்புவும் பசியில கெடக்குங்க... போய் பால் வெச்சுட்டு வந்துரவா?’ எனக் கேட்டார். அதுதான் அகிலாம்மா!
எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. எனக்குத் தேசிய விருது கிடைத்ததும் நேரே சாரைத்தான் போய்ப் பார்த்தேன். 'சார்... இது இருக்க வேண்டிய இடம் இதுதான்’ என அவரின் சினிமா பட்டறை சுவரில் அதை மாட்டினேன். 'என்னடா இப்பிடிப் பண்ற...’ என்றவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எனக்கு அன்பை அவ்வளவுதான் சொல்லத் தெரியும். இந்த வாழ்க்கையே அவர் அருளியது. பதிலுக்கு என்ன செய்தேன் எனத் தெரியவில்லை. இதோ இப்போதுகூட அவரின் நினைவாக தொப்பி வேண்டும் என அகிலாம்மாவிடம் வாங்கினேன்.
மின் மயானத்தில் அவரின் இரண்டு பாதங்களையும் தொட்டுக் கும்பிட்டு முத்தமிட்டேன். 'சார் சந்தோஷமாப் போயிட்டு வாங்க... உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லணும் சார். அகிலாம்மாவை இனிமே எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடலாம்னு இருக்கேன். நாங்க அம்மாவை நல்லாப் பார்த்துக்குறோம். அப்புறம்... ஆயிரம் சண்டைகள் போட்டாலும்... ஐ லவ் யூ சார்!''’

6 comments:

  1. Tears. i love / wish to expect bala's next movie will be father - son relation in emotional way. plz understand i am not trying to say don't make the holy relationship to commercial way.

    ReplyDelete
  2. Couldn't control my tears. Rest in Peace Balu Mahendra Sir :(

    ReplyDelete
  3. Our teacher left us wandering at the right time. We have become orphans again.

    ReplyDelete
  4. bala sir i want to be like you . i had no words to say . tears rolling in my eyes .

    ReplyDelete